இந்தோனேஷியா மற்றும் செஷல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்


இந்தோனேஷியா மற்றும் செஷல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்


இந்தோனேஷியா மற்றும் செஷல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். இந்தோனேஷியா மற்றும் செஷல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (10-3-2022) கடிதம் எழுதியுள்ளார். 

அக்கடிதத்தில், இந்தோனேஷியா மற்றும் செஷல்ஸ் பகுதிகளில், சமீபத்தில் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவங்கள் குறித்து ஒன்றிய வெளியுறத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புவதாகத் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள், கேரளாவைச் சேர்ந்த மூன்று மீனவர்களுடன் இந்தோனேசிய கடல் எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி இந்தோனேசிய வான் மற்றும் கடல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள்மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு இந்தோனேசியாவின் ஆஷேயில் உள்ள டிட்போலைர்ட் பியருக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 

அம்மீனவர்கள், அந்தமான் பதிவு எண் கொண்ட மீன்பிடிக் கப்பலில் (IND-AN-SA-MM-2110) மீன்பிடிக்கச் சென்றபோது, கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், 22-2-2022 அன்று கொச்சி துறைமுகத்தில் இருந்து 33 மீனவர்கள், 3 இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் மூலம் (IND-TN-15-MM-5501, IND-TN-15-MM-7998 மற்றும் IND-TN-15-MM-5468) மீன்பிடிக்கச் சென்றதாக மீனவர் சங்கத்தினர் மூலம் தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், 7-3-2022 அன்று அவர்கள் செஷல்ஸ் கடல் பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறி, செஷல்ஸ் நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். 

இந்த விஷயத்தில் மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்கள் நேரடியாகத் தலையிட்டு, இந்தோனேசிய மற்றும் செஷல்ஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு இப்பிரச்சினையை எடுத்துச் சென்று, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

INTERIOR PHOTOGRAPHY SUIT BEDROOM